துபாய்க்கு சரக்கு விமான சேவை 4 முறை ரத்து செய்யப்பட்டது ஏன் ? கோவை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி


துபாய்க்கு சரக்கு விமான சேவை 4 முறை ரத்து செய்யப்பட்டது ஏன் ?  கோவை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 29 May 2020 5:11 AM IST (Updated: 29 May 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

கோவையிலிருந்து துபாய்க்கு சரக்கு விமான சேவை நான்கு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் அவை ரத்து செய்யப்பட்டது ஏன்? என்று கோவை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை,

கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டாலும் விமான சேவைகள் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. கோவையிலிருந்து சார்ஜா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகளின் நுழைவு வாயிலாக விளங்கும் துபாய்க்கு நேரடி விமானம் இயக்கப்பட வேண்டும் என்று கோவையில் உள்ள தொழில் அதிபர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது துபாய்க்கு செல்ல வேண்டுமென்றால் சென்னை அல்லது கொச்சி சென்று தான் போக முடியும்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது.

துபாய்க்கு காய்கறிகள் ஏற்றுமதி

இதற்கிடையில் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை துபாய்க்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் கோவை விவசாயிகளுக்கு கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் 4 முறை கோவையிலிருந்து துபாய்க்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

ஆனால் கடந்த 2 வாரத்தில் மட்டும் 4 முறை கோவையிலிருந்து துபாய்க்கு காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதன்பின்னர் அவை ரத்து செய்யப்பட்டன. இதற்கான காரணங்கள் என்ன? என்று யாரும் உறுதியாக கூறவில்லை. இதனால் கோவை உள்பட கொங்கு மண்டலத்திலிருந்து துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு கைநழுவி போவதால் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரத்து செய்யப்படுவதால் குழப்பம்

கொரோனா பாதிப்பினால் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வருத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் துபாய்க்கு ஏற்றுமதி வாய்ப்புகள் கிட்டாமல் போனது ஏன்? என்பது குறித்து கோவை தொழில் அதிபர்கள் சிலர் கூறியதாவது:-

கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இயக்கப்பட்டால் பல்வேறு வெளிநாடுகளுக்கு அங்கிருந்து விமான சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சரக்கு சேவை மட்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி சரக்கு விமான சேவைக்கான அறிவிப்பை துபாய் நிறுவனம் வெளியிட்டது. கடந்த வாரமும், இந்த வாரமும் துபாய்க்கு சரக்கு விமான சேவை அறிவிப்பு வெளியிடப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் விமானம் சரக்கு சேவைக்கு பயன்படுத்தப்படுவதால் ஒரு முறை குறைந்தபட்சம் 15 டன் அல்லது அதற்கு மேல் எடுத்துச் சென்றால்தான் லாபம் வரும். கோவையில் குறைந்தபட்சம் 17 டன் அளவில் சரக்கு விமான சேவை புக்கிங் நடைபெறுகிறது. இருந்தபோதும் இங்கு சேவையை ரத்து செய்யப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் பயன்படுத்துவது ஏன்?

கோவைக்கு வரக்கூடிய அனைத்து சரக்கு சேவைகளும் கேரள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. வணிக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது என்று மட்டும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் கோவையில் ரத்து செய்யப்படும் இந்த சேவைகள் கேரளாவில் உள்ள விமான நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பயணிகள் விமானம் சரக்கு சேவைக்கு பயன்படுத்தப்படுவதால் ஊரடங்கு முடிந்தபின் அதே விமானங்கள் துபாய்க்கு பயணிகளை ஏற்றிச்செல்ல அதிக வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை எண்ணி சற்று நிம்மதி அடைந்த தொழில் துறையினருக்கு துபாய்க்கு சரக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வஞ்சிக்கப்படும் கொங்கு மண்டலம்

கேரளாவில் உள்ள சிறிய விமான நிலையங்களில் கூட துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை உள்ள நிலையில், தொழில் நகரமான கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை சேர்ந்த 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அதிக வசதிகளை கொண்டுள்ள கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் குறிப்பாக சர்வதேச விமான சேவைகள் அதிக அளவில் தொடங்கப்படாமல் கொங்கு மண்டலம் வஞ்சிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பிரச்சினையில் கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் முயற்சி செய்து கோவை-துபாய்க்கு நேரடி விமான சேவை மற்றும் சரக்கு சேவையை தொடர்ந்தால் தொழில் அதிபர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகளின் பொருளாதார நிலையும் வெகுவாக உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story