சூறாவளி காற்றுடன் மழை: மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் மின்பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்


சூறாவளி காற்றுடன் மழை:   மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் மின்பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 29 May 2020 5:25 AM IST (Updated: 29 May 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ரூ.75 லட்சம் மதிப்புள்ள மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை கிராமத்தில் வரலாறு காணாத அளவிற்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக நெல்லித்துறையிலிருந்து பூதப்பள்ளத்திற்கு செல்லும் வழியில் உள்ள பள்ளத்தின் ஓரத்தில் இருந்த இலவம் பஞ்சு மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அந்த வழியே சென்று கொண்டிருந்த பில்லூர் குடிநீர் திட்ட மின் பாதை கம்பிகள் மீது விழுந்தது. ரோட்டின் குறுக்கே விழுந்ததால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் சாய்ந்த வேகத்தில் மின்பாதை செல்லும் வழி நெடுகிலும் உள்ள 11 உயரழுத்த மற்றும் 35 தாழ்வழுத்த மின் கம்பங்கள் சாலையின் குறுக்கேயும் தோட்டத்தின் ஓரங்களிலும் விழுந்தது.

ரூ.75 லட்சம்

மேலும் தேக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் பவானி ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் 6 பேரூராட்சிகள், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 134 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான 22 கிலோ வாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்து உடைந்து கீழே விழுந்தது. இவற்றின் மொத்த சேத மதிப்பு ரூ. 75 லட்சம் இருக்குமென்று மின்சார வாரிய அதிகாரிகளால் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

உயரழுத்த தாழ்வழுத்த மின்கம்பங்கள் சாய்ந்ததால் நெல்லித்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் மின்சார வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் கவுஸ் முகமது ஷரீப், உதவி பொறியாளர்கள் மகாலிங்கம், ராமசாமி, பிரதீப்குமார், ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரவோடு இரவாக மின் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிரம்

குடிநீர் விநியோகம் பாதிக்காமல் இருக்க குந்தா துணை மின் நிலையத்தில் இருந்து மாற்று ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட்டது. மின் பாதையை சீரமைக்கும் பணியில் மின்சார வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சீரமைக்கும் பணி நேற்றும் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் சூறாவளி காற்றில் நெல்லித் துறையிலுள்ள விவசாயி சுப்பையா என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பில் 500-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தும், 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பாதியில் முறிந்தும் நாசமடைந்தன. இதன் சேத மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நாசமடைந்த பாக்கு மற்றும் வாழைக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story