கோவையில் இடியுடன் பலத்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


கோவையில் இடியுடன் பலத்த மழை  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 29 May 2020 6:00 AM IST (Updated: 29 May 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், ஒருசில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கருமத்தம்பட்டி,

கோவையில் இந்த ஆண்டு கோடை மழை சராசரிஅளவான 137 மி.மீ. அளவை தாண்டி பெய்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கோடை வெயில் சுட்டெரித்ததால் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக வற்ற தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று மாலையில் கோவை ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட், ரேஸ்கோர்ஸ், போத்தனூர், ராமநாதபுரம், வடவள்ளி, வடகோவை, பீளமேடு, சவுரிபாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பச்சாபாளையம், மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையாக மாறியது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவை நகரத்தில் உள்ள லங்கா கார்னர் பாலம், அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, நஞ்சப்பா ரோடு ரெயில்வே நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த திடீர் மழையில் நனைந்தபடி சென்றனர்.

ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் கடந்த சில வாரங்களாக விவசாய பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த மழையால் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அந்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் வசித்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அவர்கள் பக்கெட்டுகளை கொண்டு மழைநீரை வாரி இரைத்து வெளியேற்றினர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மரம் விழுந்து சுற்றுசுவர் சேதம் அடைந்தது.

கருமத்தம்பட்டி

இதேபோல் கருமத்தம்பட்டி மற்றும் சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியது. அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கருமத்தம்பட்டி போலீஸ்நிலையம் பின்புறம் மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி மின்வினியோகம் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

கிணத்துக்கடவு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மரம் விழுந்து காயம்

ஒண்டிப்புதூர் கதிர்மில் அருகே மழைக்காக ஒதுங்கிய சந்தனகுமார் என்பவர் மீது மரம் விழுந்து படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

Next Story