மயிலாடுதுறையில் மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
மயிலாடுதுறையில், மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறையில், மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்திய போலீசார், அதனை சோதனையிட்டனர். சோதனையில் அந்த சரக்கு லாரியில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மேலே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு கீழே புகையிலை பொருட்கள் பாலிதீன் மூட்டைகளில் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதை மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
3 பேர் கைது
விசாரணையில், தஞ்சையில் இருந்து மயிலாடுதுறைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை ரெயிலடி பகுதியை சேர்ந்த முனீஸ்வரன்(வயது 42), செம்பனார்கோவில் ராஜாமணி நகரை சேர்ந்த விஜயகுமார்(28), ஆனதாண்டவபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார்(51) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த கடத்தல் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story