குடிமராமத்து திட்டத்தில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணி சிறப்பு அதிகாரி சந்திரமோகன் ஆய்வு


குடிமராமத்து திட்டத்தில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணி சிறப்பு அதிகாரி சந்திரமோகன் ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2020 6:11 AM IST (Updated: 29 May 2020 6:11 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதை சிறப்பு அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

குடிமராமத்து திட்ட பணிகள்

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாகை, திருமருகல், கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. கீழ்வேளூர் ஒன்றியம் ஆழியூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்பட்டு வருகிறது.

நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தேவநதி வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது. திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் கிராமத்தில் திருப்புகலூர் வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் உபரி நீர் போக்கி புனரமைத்தல் பணி ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும், ஏனங்குடி கிராமத்தில் முடிகொண்டான் ஆறு தூர்வாரும் பணி ரூ.21 லட்சம் மதிப்பீட்டிலும், புத்தகரம் கிராமத்தில் திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணி ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகிறது.

131 பணிகள் தேர்வு

இந்த பணிகளை குடிமராமத்து திட்ட சிறப்பு அதிகாரியும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலாளருமான சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 131 பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள் முன்னுரிமை அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’,‘பி’ என வகைப்படுத்தப்பட்டுள்ள பணிகள் காவிரி பாசன நீர் திறப்புக்கு முன் முடிக்கப்பட வேண்டிய பணிகளாகும்.

முடிவடைய உள்ளது

அந்த பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பாசனதாரர் சங்கங்களின் மூலம் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு, தொடர்ந்து ‘சி’ பிரிவு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, துணை கலெக்டர் அபிநயா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், லதா மகேஸ்வரி, செய்திமக்கள் தொடர்பு அதிகாரி செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story