ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது


ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 29 May 2020 6:40 AM IST (Updated: 29 May 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வனவிலங்குகள் தாக்குதல், விபத்துகளில் படுகாயம் அடைந்து, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறவர்களுக்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்படுகிறது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கோவை செல்ல 3 மணி நேரம் ஆவதால், உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக வலியுறுத்தினர்.

40 ஏக்கர் நிலம்

இதற்கிடையே கடந்த ஆண்டு தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உள்பட 6 இடங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வந்தன. அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால், ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான அனுமதி நிலுவையில் இருந்தது. தற்போது மருத்துவக்கல்லூரிக்கு 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி கிடைத்தது. இதற்காக ஊட்டி எச்.பி.எப். பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், வனத்துறை முழு ஒத்துழைப்பு வழங்கியது. டெண்டர் விடும் பணிகள் நடந்து முடிந்தது. ஊட்டி மருத்துவக்கல்லூரிக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்றார்.

Next Story