நீலகிரி மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 919 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு


நீலகிரி மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 919 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 29 May 2020 7:09 AM IST (Updated: 29 May 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 919 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்து வந்த இடங்களிலேயே சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். நீலகிரியில் வடமாநில தொழிலாளர்கள் 7 ஆயிரத்து 255 பேர் உள்ளனர்.

அவர்களிடம் வருவாய்த்துறையினர் நடத்திய ஆய்வில் 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்தனர். இந்த விவரங்கள் தமிழக அரசின் கண்காணிப்பு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பிற மாநில அரசு தொழிலாளர்களை அழைத்து வர அனுமதிக்கிறோம் என்று தெரிவித்த பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அம்பன் புயலால் பாதிப்புக்கு உள்ளான மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 2 மாநிலங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட வில்லை.

40 அரசு பஸ்கள்

இந்த நிலையில் நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசு பஸ்கள் மூலம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோத்தகிரியில் 42 பேர், குன்னூரில் 92 பேர், ஊட்டி, மஞ்சூர் உள்பட மொத்தம் 919 பேர் அந்தந்த பகுதிகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு 40 அரசு பஸ்கள் மூலம் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வடமாநில தொழிலாளர்கள், அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகளுடன் புறப்பட்டனர். பஸ்சில் போலீசார், வருவாய்த்துறை ஊழியர்கள் பாதுகாப்புக்காக சென்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு 919 பேரும் சிறப்பு ரெயிலில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நீலகிரியில் இருந்து பீகார், நாகாலாந்து, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு 1,700-க்கும் மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதில் இ பாஸ் பெற்று தங்களது சொந்த செலவில் பஸ்களில் புறப்பட்டு சென்றவர்களும் அடங்குவார்கள்.

Next Story