நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தென்காசியில் 5 நாட்களாக தொற்று இல்லை


நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தென்காசியில் 5 நாட்களாக தொற்று இல்லை
x
தினத்தந்தி 29 May 2020 2:02 AM GMT (Updated: 29 May 2020 2:02 AM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசியில் 5 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசியில் 5 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

29 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்துக்கு மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இருப்பவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 301 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 28 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள், மீதமுள்ள ஒருவர் கங்கைகொண்டான் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி ஆவார். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 15 பேர் பெண்கள் ஆவார்கள். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் 4 பேர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 103 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2 பேர் இறந்து உள்ளனர். இந்த நிலையில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காயல்பட்டினம், கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில், சென்னையில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். குஜராத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்கள் 4 பேரையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்து உள்ளது.

தென்காசியில் தொற்று இல்லை

தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆக உள்ளது. இதில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 29 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story