நெல்லையில் அக்னி நட்சத்திரம் விடைபெற்ற நாளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை மரம்-மின்கம்பங்கள் சாய்ந்தன
அக்னி நட்சத்திரம் விடைபெற்ற நாளில் நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன.
நெல்லை,
அக்னி நட்சத்திரம் விடைபெற்ற நாளில் நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன.
பலத்த மழை
நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில் தாக்கம் இருந்தது. அவ்வப்போது ஒருசில இடங்களில் மழையும் பெய்தது. அக்னி நட்சத்திரம் விடைபெற்ற நாளான நேற்றும் மதியம் வெயில் தகதகத்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நெல்லையில் பிற்பகல் 2.45 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றும் பலமாக வீசியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.
கூரைகள் சாய்ந்தன
நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மகாராஜநகர், டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அடித்த காற்றுக்கு தாக்குப்படிக்க முடியாமல் நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் தற்காலிக மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் அடியோடு சாய்ந்தன. இதையடுத்து வியாபாரிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்கள், மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
எஸ்.என்.ஹைரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டதால், அந்த ரோடு சேறும், சகதியுமாக மாறியது. பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டில் மரம் சாய்ந்ததில், அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. இதேபோல் பல்வேறு இடங்களில் கார், மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
மின் தடை
மழையின்போது வீசிய சூறைக்காற்றால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஒருசில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவை மின்கம்பிகள் மீது விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது. வண்ணார்பேட்டை அருந்ததியர் தெருவில் உள்ள புளியமரம் சாய்ந்து, அருகில் உள்ள சுந்தரம் என்பவரின் வீட்டின் மீதும், மின்கம்பம் மீதும் விழுந்தது. இதில் வீடும், மின்கம்பமும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, மரத்தை வெட்டி அகற்றினர். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சீரமைத்தனர்.
பேட்டையில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அங்குள்ள மெயின் ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பேட்டை ஐ.டி.ஐ. தொழிற்பேட்டை குடியிருப்பு பகுதியில் மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பமும் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, கோடீசுவரன் நகர் அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.
தென்காசி
தென்காசியில் மாலை 4.30 மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து தூறல் விழுந்து கொண்டே இருந்தது. முக்கூடலில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. வாசுதேவநல்லூர் மற்றும் அருகே உள்ள ஆத்தவழி, சுப்பிரமணியபுரம், நவாச்சாலை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் மதியம் 2.15 மணி முதல் 3.15 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது.
பனவடலிசத்திரம் பகுதிகளான மேலநரிக்குடி, கீழநரிக்குடி, அச்சம்பட்டி, கருப்பனூத்து, தடியம்பட்டி, கூவாச்சிபட்டி, பனவடலிசத்திரம், மருக்காலங்குளம் ஆகிய ஊர்களில் காலையில் கடும் வெயில் கொளுத்தியது. மாலையில் பரவலாக மழை பெய்தது. செங்கோட்டையில் நேற்று மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்தது.
Related Tags :
Next Story