சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு


சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 May 2020 8:25 AM IST (Updated: 29 May 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் உள்பட சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. அதன்படி, சேலத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.

சென்னையில் இருந்து 56 பயணிகளுடன் சேலத்துக்கு ஒரு விமானம் வந்தது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது பரிசோதனையில் நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர், சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு குறுஞ்செய்தியில் ஆபாசமாக கூறியதுடன் மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அவரை இரும்பாலை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 16 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி நேற்று தெளிக்கப்பட்டது. அந்த கட்டிடத்திற்குள் யாரும் செல்லாமல் அருகிலேயே சாமியானா பந்தல் அமைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை போலீசார் பெற்று வருகின்றனர். இது தவிர சேலத்தை சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வருபவர்களை மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் மராட்டியத்தில் இருந்து வந்த 24 பேர், ஆந்திரா, ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா 2 பேர், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்தது. சேலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story