ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாக கூறி போலீஸ் நிலைய வாசலில் தீக்குளிக்க முயன்ற திருநங்கை
ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாக கூறி திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய வாசலில் திருநங்கை ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்மலைப்பட்டி,
ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாக கூறி திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய வாசலில் திருநங்கை ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருநங்கை
திருச்சி அரியமங்கலம் உக்கடை காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் ரம்யா (வயது 33). இவர் திருநங்கையாவார். சம்பவத்தன்று ரம்யாவின் வீட்டு உரிமையாளர் சஞ்சய் அரியமங்கலம் ரெயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ரம்யாவின் தம்பி அலங்கராஜ்(25) விலக்கிவிட்டார்.
அந்த நேரத்தில் அங்குவந்த அம்ஜித் என்பவர் சஞ்சய் மற்றும் அலங்கராஜை தாக்கியதாக தெரிகிறது. அத்துடன் மறுநாள் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து அம்ஜித், அலங்கராஜ் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அவர்களை சமரசம் செய்ய முயன்ற ரம்யாவையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி ரம்யா அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தீக்குளிக்க முயற்சி
இந்தநிலையில் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைபட்சமாக போலீசார் செயல்படுவதாக கூறி அரியமங்கலம் போலீஸ் நிலையம் முன் ரம்யா தனது உறவினர்கள் மற்றும் திருநங்கைகள் சிலருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ரம்யா, பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாற்றினார்கள். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பொன்மலை உதவி போலீஸ் கமிஷனர் பாலமுருகன் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story