துணிக்கடையில் பயங்கர தீ விபத்து


துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 29 May 2020 9:04 AM IST (Updated: 29 May 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ரெடிமேட் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பில் சேதமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு சித்திரை வீதியில் ஜெயந்திலால் என்பவருக்கு சொந்தமான துணிக்கடை உள்ளது. இதற்கிடையில் மதுரையில் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து கொண்டிருந்ததால் அவர் கடையை மூடி விட்டு சீக்கிரம் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் மழை காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இரவு 7 மணிக்கு கடையில் இருந்து திடீரென்று புகை வந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீனாட்சி அம்மன் கோவில், திடீர்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.

4 மணி நேரம்

தீயணைப்பு வீரர்கள் கடையில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க தொடங்கினார். ஆனால் கடையின் 3-வது தளத்தில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்களால் கீழ் தளத்தில் இருந்து மற்ற தளத்திற்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அங்கு பற்றிய தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினரிடம் கேட்ட போது, மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றனர். ஆனால் மின்னல் தாக்கியதில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்த மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கு காரணம் மற்றும் சேதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story