திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு 284 தொழிலாளர்கள் பஸ்களில் அனுப்பி வைப்பு


திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு 284 தொழிலாளர்கள் பஸ்களில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 29 May 2020 9:12 AM IST (Updated: 29 May 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு 284 தொழிலாளர்கள் சிறப்பு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி, 

திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு 284 தொழிலாளர்கள் சிறப்பு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்களிலும், பஸ்களிலும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், துறையூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, பாலக்கரை, அரியமங்கலம், கண்டோன்மெண்ட் மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 284 பேர் பணியாற்றி வந்தனர்.

காரைக்காலுக்கு அனுப்பிவைப்பு

அவர்கள், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தின்பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 8 சிறப்பு பஸ்கள் மூலம் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

அத்தொழிலாளர்கள் அனைவரும் சமூக இடை வெளியை கடைப்பிடித்து காரைக்கால் மாவட்டத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. என்.விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story