கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் கோஷ்டி மோதல்; 15 பேர் மீது வழக்கு 2 பேர் கைது


கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் கோஷ்டி மோதல்; 15 பேர் மீது வழக்கு 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 May 2020 10:28 AM IST (Updated: 29 May 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

கறம்பக்குடி, 

கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

கோஷ்டி மோதல்

கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியன்விடுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது 50). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் சீரங்கம் என்பவருக்கும் சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது இரு தரப்பை சேர்ந்தவர்களும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் சீரங்கம் மற்றும் ரெங்கசாமி, அவருடைய உறவினர்கள் வாசுகி, அப்பாத்துரை, தனபாலன், பாக்கியம் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ரெங்கசாமி கொடுத்த புகாரின்பேரில் சீரங்கம், தமிழ்ச்செல்வன், பாலசங்கர், கார்த்திக், சிவசாமி, துரைராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசங்கர், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் சீரங்கம் கொடுத்த புகாரின்பேரில் ரெங்கசாமி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடைகளுக்கு ‘சீல்’

*புதுக்கோட்டை கீழ ராஜ வீதி, தெற்கு 3-ம் வீதியில் உள்ள கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது குளிர்பான கடை, ஆயத்த ஆடை கடை, துணிக்கடை ஆகியவற்றில் கூட்டம் அதிக அளவு இருந்ததும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படாததும் தெரியவந்தது. மேலும் வாடிக்கையாளர்கள், உரிமையாளர்கள் ஆகியோர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் ‘சீல்’ வைத்தார். இந்த சோதனையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

*கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார், கடைவீதி பகுதியில் ஆய்வு செய்தபோது, விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியின்றி ஆட்டிறைச்சி விற்றதாக புளியஞ்சோலை பகுதியை சேர்ந்த முகமதுஅலி(62) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீஸ்காரரை மிரட்டியவர் மீது வழக்கு

*கீரனூர் அருகே திருச்சி புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை, அந்த வழியாக வந்த தி.மு.க. நிர்வாகிகள் மீட்டு, வருவாய்த்துறையினர் மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் அந்த பெண் சென்னை காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் என்பதும், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரி அங்கு வந்து, அந்த பெண்ணை அழைத்து சென்றார்.

*திருமயம் அருகே உள்ள ஓச்சம்பட்டியை சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி சிந்தாமணி. இவர், பனையப்பட்டி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மா நடத்திய விசாரணையில், புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் விசாரணையை முடித்து, அதன் விவரத்தை சிந்தாமணிக்கு தெரிவிக்க நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், கிராம நிர்வாக அலுவலர் மீனா ஆகியோர் சென்றனர். அவர்களை சிந்தாமணியின் மகன் முருகானந்தம்(வயது 37) வழிமறித்து, அவதூறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து, முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வாகனங்கள் பறிமுதல்

*காரையூர் அருகே உள்ள சங்கம்பட்டியில் சூதாடிக்கொண்டிருந்த சங்கம்பட்டியை சேர்ந்த தந்திரி என்ற அன்புமணி(34), ஆண்டிச்சாமி(40), தியாகராஜன்(38), வடமலை(27), ஆண்டிக்காளை (45) ஆகிய 5 பேரை காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்தனர்.

*ஆதனக்கோட்டை அருகே கீழக்காடு பகுதியில் மலையாண்டி என்பவருக்கு சொந்தமான 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆண் மயிலை, கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையிலான குழுவினர் உயிருடன் மீட்டனர். பின்னர் மச்சுவாடி வனத்துறை சரக அலுவலர் சங்கரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மயில், மணியாச்சி காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

*அறந்தாங்கி செங்கமானரி வெள்ளாற்று பகுதியில் நேற்று அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது, அந்த வழியாக மணல் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை டிரைவர் சாலையிலேயே நிறுத்தி விட்டு ஓடிவிட்டார். இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

*கந்தர்வகோட்டை அருகே செங்கிப்பட்டி சாலையில் கந்தர்வகோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தச்சங்குறிச்சி அருகே வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி, சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் விண்ணமங்களத்தைச் சேர்ந்த சந்திரஹாசன் மகன் சங்கர் (32) என்பவரை கைது செய்தனர்.

பலத்த மழை

*புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவரங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. அரிமளம், கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை, கடியாபட்டி, நமணசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

போலீசில் எம்.எல்.ஏ. புகார்

*அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி நேற்று அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சில விஷமிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியில், நான் பேசாததை, நான் பேசியது போன்று மிமிக்ரி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரப்பி, எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செய்து வருகின்றனர். அவதூறாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*அறந்தாங்கி அருகே சிட்டாங்காட்டை சேர்ந்தவர் கலைதம்பி. இவரது கூரை வீட்டிற்கு அருகே நாகப்பன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கலைதம்பி வளர்க்கும் ஆடு, மாடுகள், நாகப்பனின் வீட்டுக்குள்ளே சென்றதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பன், அவரது மகன்களுடன் சேர்ந்து தனது வீட்டை சேதப்படுத்தியதாக அறந்தாங்கி போலீசில் கலைதம்பி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலைதம்பியின் வீடு ஏற்கனவே கஜா புயலில் சேதமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story