பலத்த மழையுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு


பலத்த மழையுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு
x
தினத்தந்தி 29 May 2020 11:07 AM IST (Updated: 29 May 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழையுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது.


ஈரோடு,

அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அதற்கு முன்பே ஈரோடு மாவட்டத்தில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. கடந்த சில நாட்களாக ஈரோட்டில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது. கடந்த 26-ந் தேதி அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் நிறைவடைய இருந்தது. அதன் நிறைவு நாளிலும் வெயில் அதிகமாகவே காணப்பட்டது. நேற்றும் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் இருந்தது.

இந்தநிலையில் இரவு 7 மணிஅளவில் திடீரென காற்று பலமாக வீச தொடங்கியது. அதன்பிறகு மழை பொழிய தொடங்கியது. ஒரு மணிநேரத்துக்கும் மேல் பலத்த மழை பொழிந்தது. தொடர்ந்து சாரல் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெப்பம் சூழ்ந்திருந்த ஈரோடு, குளிர்ச்சி மண்டலமாக மாறியது.

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஈரோடு நாச்சியப்பா வீதி, கோட்டை முனியப்பன் கோவில் வீதி, பெருந்துறைரோடு, சூரம்பட்டி வலசு, என்.ஜி.ஜி.ஓ. காலனி, மூலப்பாளையம், கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம், பவானிரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளமாக தேங்கி நின்றது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கோபி, கொடுமுடி, ஊஞ்சலூர், பவானி, அந்தியூர், தாளவாடி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

Next Story