சாயக்கழிவுநீர் கலப்பதால் நுங்கும், நுரையுமாக காணப்படும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சுமார் 1½ மாதங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடைகளில் சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கலக்காமல் இருந்து வந்தது.
ஈரோடு,
பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் மட்டுமே சென்றது. இதனால் காவிரி ஆற்று தண்ணீரும் சுத்தமாக மாறி இருந்ததை காண முடிந்தது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பிறகு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதனால் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய, சலவை பட்டறைகள் செயல்பட தொடங்கி உள்ளன. அங்கிருந்து சாயக்கழிவுநீர் விதிமுறைகளை மீறி ஓடைகளில் திறந்து விடப்படுவதால் நுங்கும், நுரையுமாக கழிவுநீர் செல்வதை காணமுடிகிறது. ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலை கடக்கும் பிச்சைகாரன் பள்ளம் ஓடை பகுதியில் நேற்று காலை கழிவுநீர் நுங்கும், நுரையுமாக பாய்ந்தது. மேலும், கழிவுநீரில் சாயக்கழிவுகளின் நிறம் அப்படியே தென்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘நீர்நிலைகளில் விதிமுறைகளை மீறி சாய, சலவை பட்டறைகளில் இருந்து கழிவுநீர் திறந்து விடுவது தொடர் கதையாகி வருகிறது. இதுபற்றிய புகார் தெரிவித்தபோது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது தண்ணீரில் உப்பு தன்மை சாதாரணமாக உள்ளதாகவே தெரிவித்து சென்றார்கள். அப்படியென்றால் ஊரடங்கு காலத்தில் நுரை வராமல், தற்போது மட்டும் ஏன் வருகிறது என்று அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே ஓடையில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
Related Tags :
Next Story