சென்னிமலை அருகே கொடுமணல் பகுதியில் மீண்டும் அகழாய்வு தொடங்கியது


சென்னிமலை அருகே கொடுமணல் பகுதியில் மீண்டும் அகழாய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 29 May 2020 12:39 PM IST (Updated: 29 May 2020 12:39 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தை அடுத்த சென்னிமலை கொடுமணல் பகுதியில் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் மீண்டும் தொடங்கி உள்ளனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கொடுமணல். இந்த கிராமம் பண்டைய கால தமிழக மக்களின் பெரும் வணிக நகரமாக இருந்து வந்துள்ளது.

இந்தப்பகுதியில் கடந்த 1981-ம் ஆண்டு முதல், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், தமிழக தொல்லியல் துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர்கள் குழு சார்பில் பல்வேறு வகையான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல்துறை சார்பாக கொடுமணலில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் ஒரு பந்தல்கால் நடு குழிகளோடு கூடிய ஒரு சதுர வடிவிலான வீடு மற்றும் தொழில் கூடம் கண்டறியப்பட்டது.

அதிக அளவில் இந்த பகுதியில் வெண்கற்களும், மணிகளை பட்டை தீட்டுவதற்குரிய கல்லும் கிடைத்ததால், இதன் தரைதளம் மணிகள் தயாரிக்கும் தொழில் கூடம் ஆக இருந்திருக்கும் என அறியப்பட்டுள்ளது. மேலும் அரிச்சுவடி பானை ஓடு ஒன்றில் அ ஆ இ ஈ என்ற தமிழ் மொழியின் முதல் நான்கு உயிர் எழுத்துக்கள் பிராமி வரி வடிவத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த பிராமி வரிவடிவங்கள் முதல் முறையாக தமிழகத்தில் கொடுமணலில் தான் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2-மாதங்களாக கொரோனோ நோய் பாதிப்புகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொல்லியல் துறை தங்களுடைய பணிகளை நிறுத்தி வைத்து இருந்தது. இந்த நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடுமணல் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் நேற்று முதல் தொல்லியல் துறையினர் 5 பேர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story