கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவிலை ரூ.1¼ கோடியில் புதுப்பிக்கும் பணி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவிலை ரூ.1¼ கோடியில் புதுப்பிக்கும் பணி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 May 2020 10:00 PM GMT (Updated: 29 May 2020 7:00 PM GMT)

கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவிலை ரூ.1¼ கோடியில் புதுப்பிக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கயத்தாறு, 

கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவில் கடந்த 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோவில் ஆகும். 5 நிலை ராஜகோபுரம் கொண்ட இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெறாததால், இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் சுமார் ரூ.90 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் கோவிலில் தொன்மை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவிலில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரம் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, கோவிலை புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவிலில் திருப்பணிகள் விரைவில் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். .

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜோதிபாசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரியப்பன், நகர செயலாளர் கப்பல் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி-கதிரேசன் கோவில் ரோடு பகுதியில் 14.34 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10 கோடி செலவில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தப்படும் தனியார் கல்லூரி வளாகத்தில், வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், ஊரடங்கால், தீப்பெட்டி ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருளான தீக்குச்சி மரங்களை கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வருவதில் சிரமம் உள்ளது. இதனால் பெரிய நிறுவனங்கள் பெல்ஜியம், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் இருந்து தீக்குச்சி மரங்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் சிறு குறு நடுத்தர நிறுவனங்களால், வெளிநாடுகளில் இருந்து தீக்குச்சி மரங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. எனவே தமிழக அரசின் சிட்கோ மூலம் வெளிநாடுகளில் இருந்து தீக்குச்சி மரங்களை இறக்குமதி செய்து தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

ஊரடங்கு முடியும் வரையிலும், கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தினமும் 3 வேளை இலவச உணவு வழங்கப்படுகிறது. அங்கு தினமும் மதிய உணவுடன் 2 முட்டை வழங்குவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். மேலும் அவர் அங்கு உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிசெல்வம், நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம், ஆலோசகர் திலகரத்தினம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜவேல், செயலாளர் கதிரவன், பொருளாளர் செல்வமோகன், தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க இணை செயலாளர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story