தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் பெறப்பட்ட 17 ஆயிரத்து 753 மனுக்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பெறப்பட்ட 17 ஆயிரத்து 753 மனுக்களை எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா‘ என்ற திட்டத்தை தொடங்கினார். அதில் பெறப்பட்ட கோரிக்கைகள் மனுக்களாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 3 ஆயிரத்து 123 மனுக்கள் அளிக்கப்பட்டன.
2-வது கட்டமாக 17 ஆயிரத்து 753 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து வழங்கினர். அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தொடங்கப்பட்டுள்ள ‘ஒன்றிணைவோம் வா‘ என்ற திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான கோரிக்கைகள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கப்படவில்லை. வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் கிடைக்கவில்லை என்றும், அடிப்படை தேவைகள் குறித்தும் வந்து உள்ளது. அவற்றை அரசு சார்பில் தான் சரிசெய்ய முடியும் என்பதால் அதுதொடர்பான மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து உள்ளோம். ஏற்கனவே முதல் கட்டமாக 3 ஆயிரத்து 123 மனுக்கள் அளித்தோம். அவற்றை தாலூகா வாரியாக பிரித்து நடவடிக்கைக்காக அனுப்பி உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
தற்போது 17 ஆயிரத்து 753 மனுக்கள் அளித்து உள்ளோம். இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க அனுப்புவதாக கூறினார். மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் முறைகேடு நடந்து வருகிறது. குறிப்பாக கிருமிநாசினி தெளித்தல், முககவசம் வாங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இதுதொடர்பாக ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்பட்ட நிதிகளை டெண்டர் ஒதுக்கீடு செய்வதில் ஊழல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story