திருப்பூர் அரசு மருத்துவமனை சார்பில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு ஓமியோபதி மருந்து வினியோகம்


திருப்பூர் அரசு மருத்துவமனை சார்பில்   இதுவரை 50 ஆயிரம் பேருக்கு ஓமியோபதி மருந்து வினியோகம்
x
தினத்தந்தி 29 May 2020 10:28 PM GMT (Updated: 29 May 2020 10:28 PM GMT)

திருப்பூர் அரசு மருத்துவமனை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதுவரை 50 ஆயிரம் பேருக்கு ஓமியோபதி மருந்து வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின்படி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி ஓமியோபதி மருந்து மருத்துவத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிவுரையின்படி திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அதிகாரி தனம் மேற்பார்வையில், ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமையில் மருந்தாளுநர் விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்டம் முழுவதும் மக்களுக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

ஓமியோபதி மருந்து

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக அனைவருக்கும் மாத்திரை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், கோர்ட்டு ஊழியர்கள், வங்கி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. திருப்பூர் நகரின் பல பகுதிகளில் வீடு, வீடாக இந்த ஓமியோபதி மருந்தை மருத்துவ குழுவினர் வழங்கி வருகிறார்கள். இதுவரை 50 ஆயிரம் பேருக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர் எழிலரசி கூறும்போது “கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருவர் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் 4 மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு லட்சத்து 50 ஆயிரம் டோஸ் மாத்திரைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Next Story