கடலூரில் இருந்து சாராயம் குடிக்க ஆற்றில் நீந்தி வந்தவர்கள் விரட்டியடிப்பு


கடலூரில் இருந்து சாராயம் குடிக்க ஆற்றில் நீந்தி வந்தவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 29 May 2020 10:35 PM GMT (Updated: 29 May 2020 10:35 PM GMT)

சாராயம் குடிக்க ஆற்றில் நீந்தி வந்த கடலூரை சேர்ந்த மதுபிரியர்களை புதுச்சேரி போலீசார் அடித்து விரட்டினர்.

பாகூர்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்துக்கு இணையாக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு புதுச்சேரியில் கடந்த 25-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சாராயக்கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட் டது. மது வகைகளின் விலை குறைவாக இருந்தபோது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மதுபிரியர்கள் பெரும்பாலானோர் குடிப்பதற்காக புதுச்சேரிக்கு வருவது உண்டு.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் வெளியில் இருந்து யாரும் புதுவைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தாலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் சாராயத்தை வாங்கி குடிக்க கடலூரைச் சேர்ந்த பலர் ஆர்வம் காட்டினர். சாலை வழியாக சென்றால் போலீஸ் கெடுபிடி இருக்கும் என கருதி நேற்று முன்தினம் சிலர் மாநில எல்லையை வரையறுக்கும் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி புதுச்சேரிக்கு நீந்தி வந்து ஆராய்ச்சிக்குப்பம் சாராயக்கடைக்கு சென்று சாராயம் வாங்கி குடித்தனர்.

பின்னர் போதை தலைக்கேறியதும் தள்ளாடியபடி மீண்டும் ஆற்றில் நீந்தி கடலூர் பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் சாராயம் குடிப்பதற்காக மது பிரியர்கள் ஆற்றை கடந்து வரும் போது உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முன்கூட்டியே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி ‘தினத்தந்தி’யில் நேற்று செய்தி பிரசுரமானது.

இதைப்பார்த்த புதுச்சேரி உயர் போலீஸ் அதிகாரிகள், ஆற்றை கடந்து புதுச்சேரிக்கு வருபவர்களை தடுக்குமாறு பாகூர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி மாநில எல்லை பகுதியான ஆராய்ச்சிக்குப்பத்திற்கு வரும் சாலையை நேற்று காலை இரும்பு தகடுகள் போட்டு போலீசார் மூடினர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மதுபிரியர்கள் சாராயம் குடிக்க புதுச்சேரிக்கு வருவதற்காக நேற்றும் தென்பெண்ணை ஆற்றுக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். பின்னர் ஒலிபெருக்கி மூலம் ஆற்றின் வழியாக யாரும் கடந்து வரக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story