அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது வனவர் பணியிட மாற்றம்; வன காப்பாளர் தற்காலிக பணி நீக்கம்
அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய சம்பவத்தில் 2 பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், வனவரை பணியிடமாற்றம் செய்ததுடன், வன காப்பாளரை தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம் அருகே அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய சம்பவத்தில் 2 பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், வனவரை பணியிடமாற்றம் செய்ததுடன், வன காப்பாளரை தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.
மரங்கள் வெட்டி கடத்தல்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த ஆவணம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் மரங்களை ஏற்றி நின்ற ஒரு லாரியையும், ஒரு கிரேன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது குறித்து கிராம மக்கள், தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் மண்டல வனபாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் குழுவினர் விரிவான விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு லாரிகளில் கடத்தி சென்றதும் அதற்கு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கிராம மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு ஆவணம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் கிடந்த மரங்களை அப்புற படுத்துவதற்காக அதிகாரிகள் வந்தனர்.
அப்போது கிராம மக்கள், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் இதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து விட்டு அதன்பிறகு இங்குள்ள மரங்களை எடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்களுடன் அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிக பணி நீக்கம்
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியன், வன அலுவலர் குருசாமி ஆகியோர் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பாலிடம் துறை ரீதியான விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் வனவர் ராமதாசை பணியிட மாற்றம் செய்ததுடன், வன காப்பாளர் கணபதி செல்வத்தை தற்காலிக பணிநீக்கம் செய்தனர்.
2 பேர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அணவயல் கிராமம் தடியமனை சேர்ந்த மர வியாபாரி கணேசன் என்ற சிவாஜி(வயது 49) துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (42) ஆகியோரை வனத் துறையினர் கைது செய்து ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தலைமறைவாக உள்ள அணவயல் எல்.என்.புரம் கிராமத்தை சேர்ந்த சண்முகநாதனை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story