மாவட்ட செய்திகள்

முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல் + "||" + Remove Chief-Minister Yeddyurappa Senior leaders Confidential Advice

முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்

முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்
முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்று சுமார் 6 மாதங்கள் ஆகின்றன. அவருக்கு வயது 78. பா.ஜனதாவை பொறுத்தவரையில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ பதவி வழங்கப்படுவது இல்லை. இது அக்கட்சியின் விதிமுறையாக உள்ளது.

ஆனால் நாட்டிலேயே பா.ஜனதா கட்சி எடியூரப்பாவுக்கு மட்டும் அந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளித்துள்ளது. அதனால் அவர் 78 வயதிலும் முதல்-மந்திரியாக நீடிக்கிறார். கர்நாடகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதாவில் எடியூரப்பா சக்தி வாய்ந்த, யாரும் அசைக்க முடியாத, மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக வலம் வருகிறார். அதனால் அவரை நீக்க பா.ஜனதா மேலிடமே தயங்குகிறது. எடியூரப்பாவுக்கு அவர் சார்ந்துள்ள லிங்காயத் என்ற பெரும்பான்மை சமூகத்தின் முழுஆதரவு உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதாவில் முக்கிய தலைவர்களில் முன்னாள் மந்திரிகள் முருகேஷ் நிரானி, உமேஷ்கட்டி, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகிய 3 பேர் மந்திரி பதவியை எதிர்நோக்கினர். ஆனால் அவர்களுக்கு எடியூரப்பா மந்திரி சபையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், அவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.

தற்போது கொரோனா நெருக்கடியில் கர்நாடகம் சிக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த மூன்று தலைவர் களும் ஒன்றுகூடி எடியூரப்பாவுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் கடந்த 15 நாட்களில் சுமார் 6 தடவை ஒன்றுகூடி ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக ஒரே கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய தகவல் எடியூரப்பாவுக்கு தெரியவந்துள்ளது. அவர் உடனே முருகேஷ் நிரானியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், மந்திரி பதவிக்கான வாய்ப்பு உள்ளதாகவும், அதுவரை காத்திருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகேஷ் நிரானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நாங்கள் ரகசியமாக எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை. இது தொடர்பாக வெளியான தகவல் வெறும் வதந்தி. நான் ஒன்றும் சன்னியாசி அல்ல. எனக்கும் மந்திரி பதவி மீது ஆசை உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நான் தலைமை தாங்கி வழிநடத்துவதாக கூறுவது தவறானது. நான் கடந்த 2 மாதமாக யாருடனும் சேர்ந்து ஆலோசனை நடத்தவில்லை.

பெங்களூருவுக்கும் வரவில்லை. ஒருவேளை வந்தாலும், வந்த வேலையை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிவிடுவேன். வேறு யாரையும் நான் சந்திக்கவில்லை. மற்றவர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை. மந்திரி பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தி எனக்கு இல்லை. நான் சீரான நிலையில் தான் இருக்கிறேன். அதிருப்தி குறித்து பகிரங்கமாக நான் எங்கும் பேசவில்லை. இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.