கிருமிநாசினி வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு புகார்: அ.தி.மு.க.-தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம்
கிருமிநாசினி வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு புகார் எழுந்ததால் கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவிடைமருதூர்,
கிருமிநாசினி வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு புகார் எழுந்ததால் கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் காயத்ரிஅசோக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி பூங்குழலி முன்னிலை வகித்தார். 24-வது வார்டு உறுப்பினர் சுகுமார் மறைவுக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரூ.2 கோடியே 72 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளுதல். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின்போது கொரோனா நோய் தடுப்பு பணிக்காக கிருமிநாசினி, சுண்ணாம்பு பவுடர், பிளச்சிங் பவுடர், கருப்பு பினாயில் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தி.மு.க. உறுப்பினர்களுக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முறைகேடு
அ.தி.மு.க. உறுப்பினர் சசிகலா அறிவொளி பேசுகையில், ‘கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை வாங்கியதற்குரிய ரசீது ஆவணங்களை கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. கணினி மென்பொருள் நிறுவனத்தில் இருந்து கிருமி நாசினி வாங்கியதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே முறைகேடு நடந்திருப்பது ஊர்ஜிதம் ஆகிறது’ என கூறினார். ஒன்றியக்குழுதலைவர் காயத்ரிஅசோக்குமார் பேசுகையில், அனைத்து பொருட்களும் முறையாகவே வாங்கப்பட்டு உள்ளது என கூறினார். அ.தி.மு.க., தி.மு.க. இடையே நடந்த வாக்குவாதம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story