நாகை மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் பருத்தி ஏலம் தொடக்கம் அதிகாரி அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் பருத்தி ஏலம் தொடங்க உள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வித்யா கூறினார்.
பொறையாறு,
நாகை மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் பருத்தி ஏலம் தொடங்க உள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வித்யா கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் வித்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் நாகை வேளாண் விற்பனை குழுவிற்கு உட்பட்ட மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, குத்தாலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், திருமருகல் அருகே சீயாத்தமங்கை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பருத்தி மறைமுக ஏலம் தொடங்க உள்ளது.
அதிகபட்ச விலை கிடைக்க...
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்திக்கு அதிகபட்ச விலை கிடைக்க பருத்தியை நன்கு உலரவைத்து, அதிலுள்ள தூசு போன்ற பொருட்களை நீக்கி தரமான பருத்தியை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் சாக்குப்பையில் பருத்தியை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு செம்பனார்கோவிலிலும், மாலை 4 மணிக்கு சீர்காழியிலும், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சீயாத்தமங்கையிலும், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு குத்தாலத்திலும், சனிக்கிழமை காலை 11 மணிக்கு மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் பருத்தி ஏலம் நடைபெறும்.
நூற்பாலை உரிமையாளர்கள்
ஏலத்தில் இந்திய பருத்தி கழகத்தின், திருப்பூர், கோயம்புத்தூர், பண்ருட்டி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், நூற்பாலை உரிமையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் சங்கர் ராஜா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story