சிறைத்துறை அதிகாரி கொரோனா வைரசால் பலி - புழல் சிறையில் கைதிகள் 31 பேரும் பாதிப்பு
புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். புழல் சிறை கைதிகள் 31 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிறைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
செங்குன்றம்,
சென்னை புழல் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகளும், மகளிர் சிறையில் 150-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். புழல் தண்டனை சிறையில் இருந்த கைதிகளில் 19 பேர் கடந்த 21-ந்தேதி தனி வேன் மூலம் கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு 19 பேரை பரிசோதனை செய்தபோது 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 19 பேருடன் தொடர்பில் இருந்த புழல் சிறையில் உள்ள 98 கைதிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 31 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. அனைவரும் புழல் சிறைக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரியாக இருந்த 57 வயதுடைய ஒருவர், கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.புழல் சிறையில் 31 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைத்துறை அதிகாரி உயிரிழந்த சம்பவம் சிறை கைதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் காலடிபேட்டை மார்க்கெட் தெருவில் வசித்து வந்த 66 வயது டாக்டர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அவர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் லட்சுமி நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார். இந்த நிலையில் ஆலந்தூர் தாடிக்கார சாமி தெருவில் உள்ள துணிக்கடை வியாபாரியின் 50 வயது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். ஆதம்பாக்கம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story