சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ரெங்கநாதன் தெரு கடைகளை மூட சென்னை மாநகராட்சி நடவடிக்கை - மீண்டும் வெறிச்சோடியது


சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ரெங்கநாதன் தெரு கடைகளை மூட சென்னை மாநகராட்சி நடவடிக்கை - மீண்டும் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 30 May 2020 5:29 AM IST (Updated: 30 May 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் ரெங்கநாதன் தெரு மீண்டும் வெறிச்சோடியது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னையின் வர்த்தக மையமான தியாகராயநகரில் உள்ள கடைகள் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு வெறிச்சோடி காணப்பட்டது. தெருவின் நடுவே கடை ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி முதல் 34 வகையான தனிக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. எனினும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கருத்தில் கொண்டு ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அன்று திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர், ஒரு சில நாட்களில் ரெங்கநாதன் தெருவில் உள்ள தனிக் கடைகள் திறக்கப்பட்டன.

இதனால், ரெங்கநாதன் தெரு மீண்டும் களை கட்ட தொடங்கியது. வாடிக்கையாளர்களும் தேன் இருக்கும் இடத்தை தேனீக்கள் தேடி வருவது போன்று ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை தேடி வந்து மொய்க்க ஆரம்பித்தனர். இதனால், ரெங்கநாதன் தெருவில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சவாலாக அமைந்தது. இதனால், அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் உருவானது.

எனவே, சென்னை மாநகராட்சி சார்பில் ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை அடைக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், நாளை முதல் நாங்கள் கடையை அடைத்து கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஒரு சில கடையினர் அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து கடைகளை உடனே அடைத்துவிட்டனர். இன்னும், ஒரு சில கடை உரிமையாளர்கள் பாதி ஷட்டரை திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால், ரெங்கநாதன் தெரு மீண்டும் வெறிச்சோடி காணப்பட்டது.

எனினும், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஒரு நாள் மட்டும் அவகாசம் அளித்துள்ளதாக தெரிகிறது. இன்று(சனிக்கிழமை) ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் திறக்கப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீல் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Next Story