மனுக்களை போலியாக தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை - அமைச்சர் காமராஜிக்கு, தி.மு.க. பதில்


மனுக்களை போலியாக தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை - அமைச்சர் காமராஜிக்கு, தி.மு.க. பதில்
x
தினத்தந்தி 30 May 2020 5:34 AM IST (Updated: 30 May 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

மக்களிடம் இருந்து வந்த மனுக்களைத் தான் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோமே தவிர, மனுக்களை போலியாகத் தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என்று தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. செய்தி தொடர்புத்துறை இணைச்செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாகப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு அ.தி.மு.க. அரசு தேவையான உதவிகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதை செய்யவில்லை. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் எண்ணத்தில் ‘ஒன்றிணைவோம் வா‘ என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் மூலம் பல லட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களும், காய்கறியும், மருந்துப் பொருட்களும், நிதி உதவிகளும் தமிழகம் முழுவதும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உணவுகளைத் தயாரித்துப் பொட்டலங்களாகவும் வழங்கினோம்.

ஒரு லட்சம் மனுக்களைத் தலைமைச் செயலாளரிடம் வழங்கினோம். மீதமுள்ள மனுக்களை மாவட்ட ரீதியாகப் பிரித்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மூலமாக மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் காமராஜ், ‘தி.மு.க. கொடுத்த மனுக்கள் போலியானவை, பொய்யானவை‘, என்று கூறியிருக்கிறார். மக்களிடம் இருந்து வந்த மனுக்களைத் தான் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோமே தவிர, இவற்றை போலியாக தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை.

அமைச்சர் காமராஜ், நேரத்தையும் இடத்தையும் சொன்னால் நேரில் வந்து தி.மு.க. கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது என்றும், மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பது பொது மக்களுக்கான நேர்மையான அரசியல்தான் என்பதை நிரூபிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story