கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடியில் ரூ.126 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடியில்  ரூ.126 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 May 2020 5:42 AM IST (Updated: 30 May 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பில் 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28.5.2020 அன்று தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பட்லூர், தேனி ஒன்றியத்தை சேர்ந்த அரண்மணைப்புதூர், போடிநாயக்கனூர் ஒன்றியம் கோடாங்கிப்பட்டி, போடிநாயக்கனூர் ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம், மற்றும் பல்வேறு நகராட்சி அலுவலக கட்டிடங்கள், காரைக்குடி நகராட்சி, கணேசபுரத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட மல்லிகாபுரம், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட வேளச்சேரி ஆகிய இடங்களில் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 21 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புற சமூகநல மருத்துவமனைகள் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன.

பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட 330 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் ஊரக தொழில் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி மதிப்பீட்டில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Next Story