சென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்: கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு


சென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்: கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2020 1:16 AM GMT (Updated: 30 May 2020 1:16 AM GMT)

சென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்தது.

களியக்காவிளை,

சென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால், அந்த கிராமத்தை தனிமைப்படுத்தி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்து நுழைந்தனர்

சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வரும் நபர்கள் ஆரல்வாய்மொழியில் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் பரிசோதனை முடிவு வரும் வரை தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். இத்தகையை கெடுபிடிக்கு பயந்து சிலர் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து வருவதாகவும், சிலர் நூதன முறையில் உள்ளே நுழைந்து விடுவதாகவும் தெரிய வந்தது.

அந்த வகையில் சென்னையில் இருந்து குமரிக்கு வந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அவர்கள் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதால், அந்த கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.

புதுமனை புகுவிழாவில் பங்கேற்பு

அதாவது, சென்னையில் இருந்து ஒரே காரில் சிலர் புறப்பட்டனர். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குடுக்கச்சிவிளை கிராமத்தில் ஒரு புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக வந்தனர். சென்னையில் இருந்து வருவதால் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமை முகாமில் தங்க வைப்பார்கள் என்பதை அறிந்த அவர்கள், பரிசோதனையை மேற்கொள்ளாமல் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் உறவினர் ஒருவர் கொடுத்த திட்டப்படி, ஆரல்வாய்மொழியை நெருங்கிய போது காரை அங்கேயே நிறுத்தி உள்ளனர். பின்னர் நடையாக குமரிக்குள் நுழைந்த அவர்கள், ஏற்கனவே உறவினர் கொண்டு வந்த காரில் ஏறி குடுக்கச்சிவிளை கிராமத்துக்கு சென்றனர். அங்கு நடந்த புதுமனை புகுவிழாவில் 3 பேர் மட்டும் பங்கேற்றனர். மற்றவர்கள் வேறு இடத்துக்கு சென்றதாக தெரிகிறது.

கொரோனா பாதிப்பு

நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் மகிழ்ச்சியாக அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது, அவர்கள் 3 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்ற விவரம் கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அதிகாரிகள், மருத்துவக்குழுவினர் விரைந்து வந்து 3 பேரை களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு அழைத்து சென்று, அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதாவது, அவர்களிடம் சளி மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது

உடனே 3 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் வந்த மேலும் சிலர் வேறு பகுதியில் இறங்கியதாக தெரிகிறது. அவர்களை பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் இருந்து கொரோனா பாதித்த 3 பேரும், புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால், அதில் கலந்து கொண்ட அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், குடுக்கச்சிவிளை கிராமத்தை அதிகாரிகள் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக அங்கு பேரிகார்டுகள் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. புதுமனை புகுவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட தடுப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது.

Next Story