குமரியில் தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி 192 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


குமரியில் தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி 192 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 May 2020 7:02 AM IST (Updated: 30 May 2020 7:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் நடந்த ஓவியப் போட்டியில் 192 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில், 

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் நடந்த ஓவியப் போட்டியில் 192 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓவியப் போட்டி

கொரோனா விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டிகளை தீயணைப்புத்துறை சார்பில் நடத்த தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களின் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குலசேகரம், குளச்சல், கொல்லங்கோடு மற்றும் குழித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையங்களில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது.

192 பேர் பங்கேற்பு

போட்டிகள் 6 வயது முதல் 10 வயது வரையிலான மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், 11 முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் நடந்த ஓவியப் போட்டியில் 6 முதல் 10 வயது வரையிலானவர்கள் பிரிவில் 16 பேரும், 11 வயது முதல் 16 வயது வரையிலானவர்கள் 29 பேரும் என மொத்தம் 45 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணபாபு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் 25 பேரும், தக்கலை தீயணைப்பு நிலையத்தில் 33 பேரும், குழித்துறையில் 21 பேரும், குளச்சலில் 25 பேரும், குலசேகரத்தில் 22 பேரும், கொல்லங்கோட்டில் 21 பேரும் என மொத்தம் 192 பேர் கலந்து கொண்டனர்.

மண்டல, மாநில போட்டிகள்

போட்டியில் மாணவ, மாணவிகள் வரைந்து கொடுத்த ஓவியங்களை ஓவிய ஆசிரியர்கள் மூலம் மதிப்பீடு செய்ய வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் மதுரையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியிலும், அதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்பார்கள் என்று மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணபாபு தெரிவித்தார்.

ஓவியப்போட்டிக்கான ஏற்பாடுகளை அந்தந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். மண்டைக்காட்டில் குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் மேற்பார்வையிலும், கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்தில் நிலைய ஆய்வாளர் சந்திரன் மேற்பார்வையிலும், கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் மேற்பார்வையிலும் நடந்தது.

Next Story