ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ்


ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும்  நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல்  ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 30 May 2020 7:14 AM IST (Updated: 30 May 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சூலூர்,

சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட முதலிபாளையம் ரங்கா நகர் சாலையில் எம்.என்.பாலிஸ்டர் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பில் ஊராட்சி அலுவலகத்துக்கு புகார் வந்தது. இந்த நிலையில், நேற்று முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி சார்பில் முதலிபாளையம் ஊராட்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று அந்த நிறுவன முன்புற கேட்டில் நோட்டீஸ்களை ஒட்டினர்.

சுற்றுப்புற பாதிப்பு

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- முதலிபாளையம் பகுதியில் சுமார் 12 வருடங்களாக இயங்கி வரும் இந்த ரசாயன தொழிற்சாலை எந்தவித லைசென்சும் பெறாமல் இயங்கி வருவது தெரியவந்தது. மேலும், இது குறித்து ஆய்வு செய்த போது இந்த நிறுவனமானது திரவ கழிவுகளை ஆழ்குழாய் மூலம் நிலத்தடியில் கலந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் எரிக்கப்படும் கழிவுகளானது நச்சுப்புகையாக மாறி சுற்றுப்பகுதியில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கிறது. இது குறித்து பொதுமக்கள் சார்பில் புகார்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து நிறுவனத்திடம் பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், முறையாக பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை ஏற்க மறுத்து நிறுவனம், நோட்டீஸ்களை திரும்பவும் பஞ்சாயத்துக்கே திருப்பி அனுப்பி விட்டது. எனவே முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி அலுவலகம் சார்பில் தற்போது அந்த நிறுவனத்தின் முன்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்ட 7 நாட்களுக்குள் இந்த நிறுவனம் சார்பில் முறையாக லைசென்ஸ், மாசு கட்டுப்பாட்டின் அனுமதி மற்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர வரைமுறைகளை பஞ்சாயத்து ஆணையாளரிடம் முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மூச்சு திணறல்

தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விசாகா, வேலாயுதம் மற்றும் டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: -முதலிபாளையம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாகவே காலை முதல் இரவு வரை இந்த ரசாயன தொழிற்சாலை மூலம் நச்சுப்புகை காற்றில் கலந்து எங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு அடிக்கடி மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்படுகிறது. மேலும், எங்கள் பகுதி ஆழ்குழாய் மூலம் வரும் நீரில் ஒருவித எண்ணெய் தன்மை காணப்படுகிறது. மேலும் அந்த நீரை பயன்படுத்தும் போது சருமங்களில் ஒருவித அரிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து கலெக்டர் மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம். இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.பி கந்தவேல் கூறியதாவது:- இந்த தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் வெளியிடப்படும் நச்சுப் புகையால் அதனை சுற்றியுள்ள பொது மக்களுக்கு பலமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பல வயதானவர்கள் மூக்கில் சுவாசக் கருவிகளை பொருத்தியவாறு வீட்டில் வசித்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த நிறுவனத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே பொதுமக்கள் சார்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் தற்போது நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story