மரம் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி தலைதுண்டாகி சாவு கோவை அருகே பரிதாபம்


மரம் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி  கர்ப்பிணி தலைதுண்டாகி சாவு  கோவை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 30 May 2020 7:32 AM IST (Updated: 30 May 2020 7:32 AM IST)
t-max-icont-min-icon

மரம் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

சூலூர்,

கோவை அருகே கலங்கல் சாலையில் உள்ள பொன்னப்ப நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (35). இவர் அதே பகுதியில் ‘ஆதர்ஷனா பேக்கேஜிங் மில்’ என்ற பெயரில் சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பெயர் கல்பனா (23). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆதர்சனா (3), என்ற பெண் குழந்தை உள்ளது. கல்பனா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனியார் நிறுவனங்களுக்கு பலகையால் பெட்டி செய்து கொடுக்கும் இவர்களது சொந்த கம்பெனியில் கணவன் மற்றும் அவருக்கு உதவியாளராக மனைவி ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று பணியில் இருந்த தர்மராஜ், மின்வாரிய அலுவலகத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

கல்பனாவின் தாயாரான பேபி மகளின் வீட்டுக்கு வந்து இருந்தார். கர்ப்பிணி பெண் கல்பனா மரம் அறுக்கும் எந்திரம் அருகே சென்று மரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இரண்டு பேர் ஒன்றாக செய்யக்கூடிய அந்த எந்திரத்தில் கல்பனா மட்டும் தனியாக வேலை செய்ததாக தெரிகிறது. அப்போது எந்திரத்தில் ஒரு பகுதியில் மரத்தை விட்டு மறு பகுதியில் அறுக்கப்பட்ட மரத்தை எடுப்பதற்காக தலையை சாய்த்து குனிந்து உள்ளார்.

தலைதுண்டாகி சாவு

இந்த நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக அவரது மேலாடை எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் இரும்பு ராடில் மாட்டிக் கொண்டது. மேலும் அந்த இரும்பு ராடு வேகமாக சுற்றியதால் மேலாடையானது இறுகி கல்பனாவின் தலை அந்த எந்திரத்தில் உள்ள ஒரு உதிரி பாகத்தில் சிக்கிக்கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் கல்பனாவின் தலை அந்த எந்திரத்தில் சிக்கி துண்டித்து சுமார் 3 அடி தூரம் தள்ளி விழுந்தது. தாயாரின் கண்எதிரில் மகள் எந்திரத்தில் சிக்கி தலைதுண்டானதை பார்த்து கதறிதுடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தலை துண்டாகி கிடந்த கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்பனா தலைதுண்டாகி இறந்தது குறித்து அவருடைய கணவர் தர்மராஜிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கர்ப்பிணி எந்திரத்துக்குள் சிக்கி தலைதுண்டாகி இறந்த சம்பவம் சூலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story