கட்டில்-நாற்காலி பின்னும் தொழிலை சிதைத்த ஊரடங்கு பனை நார், பிளாஸ்டிக் வயரை மானிய விலையில் வழங்க வலியுறுத்தல்
கட்டில்-நாற்காலி பின்னும் தொழிலை கொரோனா ஊரடங்கு சிதைத்து விட்டது.
நெல்லை,
கட்டில்-நாற்காலி பின்னும் தொழிலை கொரோனா ஊரடங்கு சிதைத்து விட்டது.
வயர் பின்னும் வேலை
கட்டில், நாற்காலி இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் பனை நார் மூலம் பின்னப்பட்ட கட்டில், நாற்காலிகளே இருந்தன. கால மாற்றத்தில் பனை நாருக்கு பதிலாக, குறைந்த விலை கொண்ட பிளாஸ்டிக் வயரால் பின்னப்பட்ட கட்டில், நாற்காலிகளை பயன்படுத்த தொடங்கினர். எனினும் பனை நாரின் மகத்துவத்தை அறிந்த பலரும் அதன்மூலம் பின்னப்பட்ட கட்டில், நாற்காலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி அருகில் சில குடும்பத்தினர், பனை நார் மற்றும் வயர் மூலம் கட்டில், நாற்காலி பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு இந்த தொழிலில் பார்வையற்றவர்கள் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து இந்த தொழிலைக் கற்றுக் கொண்ட அவர்களது வாரிசுகள், தற்போது இந்த வயர் பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வயர் பின்னும் தொழிலாளர்களையும், இந்த ஊரடங்கு விட்டு வைக்கவில்லை. அவர்களது தொழிலையும் சிதைத்து விட்டது.
ஊரடங்கில் பல்வேறு கட்டங்களாக தளர்வு அறிவித்தாலும், வயர் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர்.
ஊரடங்குக்கு முன்பாக பலரும் தங்களது கட்டில், நாற்காலிகளைக் கொண்டு வந்து, அவற்றில் உள்ள பழைய வயர்கள், நார்களை அகற்றி விட்டு, புதிதாக நார்கள், வயர்களை பின்னல் செய்து தருமாறு கூறுவார்கள். இதன்மூலம் இந்த தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு கணிசமான வருமானம் கிடைத்தது.
ஆனால், தற்போது ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டதால், கட்டில், நாற்காலிகளை பின்னல் செய்து தருமாறு ஆர்டர் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. வாரத்தில் ஓரிருவர் மட்டுமே கட்டில், நாற்காலிகளை பின்னுவதற்கு ஆர்டர் கொடுப்பதால், போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை மகாராஜ நகரில் கட்டில் பின்னல் வேலை செய்து வரும் செல்வின் ராணி என்பவர் கூறியதாவது:-
வேலை அடியோடு பாதிப்பு
நாங்கள் கட்டில் பின்னல் தொழில் மூலம் கிடைக்கும் எளிய வருமானம் மூலம் குடும்பம் நடத்தி வருகிறோம். இதில் சேமிப்பு என்று பெரிதாக கிடையாது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால், எங்களது வேலை அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது.
தற்போது ஊரடங்கு தளர்த்தினாலும், பொதுமக்களின் கையில் பணப்புழக்கம் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் தங்களது வீடுகளில் உள்ள பழைய கட்டில்கள், நாற்காலிகளில் அறுந்து போன வயர்களை மாற்றுவதற்கு முன்வருவது இல்லை.
இதேபோன்று அலுவலகங்களும் முழுமையாக இயங்காததால், நல்ல நிலையில் இருக்கும் நாற்காலிகளை மட்டுமே பயன்படுத்தி கொள்கிறார்கள். முழுமையான ஊழியர்களுடன் அலுவலகம் செயல்பட்டால் மட்டுமே சேதம் அடைந்த நாற்காலிகளில் வயர் பின்னலுக்கு எங்களிடம் எடுத்து வருவார்கள்.
நிவாரண உதவி
ஒரு கட்டிலை வயரால் பின்னல் செய்து கொடுப்பதற்கு 2 நாட்களாகி விடும். அதேபோன்று ஒரு நாளில் 2 அல்லது 3 நாற்காலிகளில் பின்னல் செய்து கொடுப்போம். இரும்பு கட்டிலில் வயர் பின்னுவதற்கு ரூ.1,200-ம், மரச்சட்ட கட்டிலில் வயர் பின்னுவதற்கு ரூ.1,500-ம் கூலியாக பெற்று வந்தோம்.
ஊரடங்கிற்கு பிறகு வயர், பனை நார் போதிய அளவு கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒரு கிலோ பிளாஸ்டிக் வயரானது ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆக விலை உயர்ந்து உள்ளது. பிளாஸ்டிக் வயரின் விலை உயர்வும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் வயர் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். கொரோனா ஊரடங்கு, கட்டில் வயர் பின்னும் தொழிலாளர்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளது. எனவே, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். பனை நார், பிளாஸ்டிக் வயர் மானிய விலையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story