நெல்லையில்சூ றைக்காற்றில் சேதம் அடைந்த மின்கம்பங்கள் சீரமைப்பு ஊரடங்கு வேளையில் விரைந்து செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு


நெல்லையில்சூ றைக்காற்றில் சேதம் அடைந்த மின்கம்பங்கள் சீரமைப்பு ஊரடங்கு வேளையில் விரைந்து செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 30 May 2020 7:42 AM IST (Updated: 30 May 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு சேதம் அடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.

நெல்லை,

நெல்லையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு சேதம் அடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு வேளையில் விரைந்து செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மின் கம்பங்கள் சேதம்

நெல்லையில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகளும் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன.

இதனால் மழை பெய்ய தொடங்கியதும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்து முடிந்த பிறகு, மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக களத்தில் இறங்கினர். அவர்கள் தற்காலிகமாக மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். பேட்டை பகுதியில் மட்டும் அதிக சேதம் என்பதால் பல மணி நேரம் கழித்தே மின்வினியோகம் கிடைத்தது.

கொரோனா ஊரடங்கு வேளையில் பொதுமக்கள் பெரும்பாலும் மின்சாதனங்களையே நம்பி உள்ளனர். டி.வி. பார்த்தல், கணினியில் வேலை செய்தல் உள்பட பல்வேறு வகையில் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சீரமைப்பு பணி

பலத்த சூறைக்காற்றால் நெல்லை மாநகரில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்தன. மின்வாரிய நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி உத்தரவுப்படி நேற்று என்ஜினீயர்கள், அதிகாரிகள், களப்பணியாளர்கள் நேரடி ஆய்வில் ஈடுபட்டார்கள். உடனடியாக புதிய மின்கம்பங்களுடன் அந்தந்த பகுதிக்கு சென்றனர். முறிந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்கம்பிகளை இணைத்தனர். இவ்வாறு நேற்று பகல் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பணி தீவிரமாக நடைபெற்றது.

மாலையில் நெல்லை பகுதியில் மழை பெய்தது. அப்போதும் இடைவிடாமல் மின் கம்பங்கள் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரை அவர்களது பணி நடைபெற்றது. ஒருசில இடங்களில் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய கம்பங்களை நட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் பாராட்டு

ஊரடங்கு வேளை மற்றும் கொட்டும் மழையில் தீவிரமாக வேலை செய்து மின்சார வினியோகம் செய்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நெல்லை மாநகரில் 12 பிரிவுகளில் ஊழியர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவும் புயல் காலத்தில் ஏற்படுவது போன்ற ஒரு பாதிப்புதான். இருந்தபோதிலும் காற்று வீசிய அன்று பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக தீர்வுகளை மட்டும் ஏற்படுத்தி மின் இணைப்பு வழங்கினோம். அதன்பிறகு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய கம்பங்கள் நடுதல், கம்பிகள் இணைப்பு போன்ற பணிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு ஒருசில இடங்களில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் உதவி செய்தார்கள்“ என்றனர்.

Next Story