கைதான அழகுகலை நிலைய உரிமையாளருக்கு கொரோனா அறிகுறி: சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது


கைதான அழகுகலை நிலைய உரிமையாளருக்கு கொரோனா அறிகுறி: சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 30 May 2020 8:27 AM IST (Updated: 30 May 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கைதான அழகுகலை நிலைய உரிமையாளருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சேலம்,

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் அழகுகலை நிலையம் நடத்தி வந்தார். இவர் வேலைக்கு வந்த 2 பெண்களை தனது செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி விபசாரத்திற்கு வற்புறுத்தி உள்ளார். இதேபோன்று மேலும் 2 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளார்.

இதுதொடர்பாக சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அழகு கலை நிலைய உரிமையாளர் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அழகுகலை நிலையத்தில் விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைதான 3 பேருக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அழகுகலை நிலைய உரிமையாளருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதனால் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக பெண் போலீசார் மிகவும் கலக்கம் அடைந்தனர். அழகுகலை நிலைய உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்வதற்காக சட்டம்-ஒழுங்கு போலீசாரும் உடன் சென்றனர். பின்னர் கைதானவர்கள் டவுன் போலீஸ் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டனர். இவர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கைதான அழகுகலை நிலைய உரிமையாளர் உள்பட 3 பேரும் ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் அழகு கலை உரிமையாளருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்ததால், அந்த சிறையில் இருந்த 81 கைதிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் ஏற்கனவே ஒரு கைதிக்கு கொரோனா தொற்று இருந்ததால் இரும்பாலை போலீஸ் நிலையம் மூடப்பட்டது. இந்த நிலையில் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

Next Story