வெவ்வேறு விபத்துகளில் முதியவர்கள் உள்பட 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் முதியவர்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2020 8:28 AM IST (Updated: 30 May 2020 8:28 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வையம்பட்டி, 

திருச்சி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

முதியவர்கள் பலி

மணப்பாறையை அடுத்த பச்சுடையான்பட்டியை சேர்ந்த சிதம்பரம் (வயது 79) நேற்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாணிக்கம்பிள்ளை சத்திரம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த முத்துக்கிருஷ்ணன்(58) படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியை சேர்ந்த கண்ணுசாமி (65) நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 விபத்துகள் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மினி லாரி மோதி வாலிபர் சாவு

கல்லக்குடியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலை குடியிருப்பை சேர்ந்தவர் ராமசந்திரன்(வயது 32). நேற்று முன்தினம் இரவு திருவள்ளுவர் நகரில் உள்ள தனது பெற்றோரை பார்த்துவிட்டு, வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த மினிலாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கஞ்சா விற்ற 3 பேர் கைது

* மணப்பாறை மோர்குளம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (38), குமார்(42) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* திருச்சி ஆழ்வார்தோப்பு கியாஸ் குடோன் அருகே கஞ்சா விற்றதாக தென்னூர் ஹிதாயத்நகரை சேர்ந்த ஜாகீர்உசேனை(43) தில்லைநகர் போலீசார் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த விக்ரம்(19) செங்குளம்காலனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் மீது மோதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து விக்ரமை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் உள்பட 3 பேரை கைது செய்தனர். 2 பேரை தேடி வருகிறார்கள்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

* திருச்சி வரகனேரி பென்சனர்தெருவை சேர்ந்த குமாரிடம் (46) கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்ததாக சித்திக்(37), சர்புதீன்(20), தாரிக்ராஜா(19) உள்பட 4 பேரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

மதுவிற்ற 3 பேர் கைது

* திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறைரோடு பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ரவிக்குமார்(42), குணசீலன்(47), ராஜேந்திரன்(55) ஆகியோரை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காவலாளிகள் மீது தாக்குதல்

* திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(52) திருச்சி பெரியகடைவீதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த 3 பேர் அவருடைய செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது அங்குள்ள வங்கி காவலாளி கமால்பாட்சா ஓடிவந்து அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் 2 காவலாளிகளையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு எலிமருந்து வைத்திருந்த 9 கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர்.

Next Story