திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் ரூ.2¾ கோடியில் விரிவாக்கம்
குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை தங்க வைக்க திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் ரூ.2¾ கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
திருச்சி,
குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை தங்க வைக்க திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் ரூ.2¾ கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
சிறப்பு முகாம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு, பாஸ்போர்ட் தேதி காலாவதியாகியும் இந்தியாவில் தங்கி இருத்தல், போதை மருந்து கடத்துதல், போலி பாஸ்போர்ட் தயாரித்தல் போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீதான வழக்கு முடியும் வரை சிறப்பு முகாமை விட்டு வெளியே செல்ல முடியாது. முகாமிற்குள்ளேயே சமைத்து சாப்பிடும் வசதி, செல்போன் பயன்படுத்தும் வசதி என அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் தற்போது இலங்கை தமிழர்கள், வங்காளதேசத்தினர், பல்கேரியா நாட்டை சேர்ந்தவர்கள், இங்கிலாந்து, சீனா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 73 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் தினமும் ரூ.175 படியாக வழங்கப்படுகிறது. தற்போது சிறப்பு முகாமில் 40 அறைகள் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 54 அறைகள் சிதிலமடைந்து பயன்பாடற்ற நிலையில் கிடக்கின்றன.
54 அறைகள்
இந்த 54 அறைகளையும் கழிவறை உள்பட பல்வேறு வசதிகளுடன் ரூ.2¾ கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கு 20 அறைகள் ஒதுக்கப்படுகிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி சுற்றுச்சுவர் இருக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரிவாக்கம் செய்யப்பட்ட சிறப்பு முகாம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், குற்ற வழக்குகளில் தொடர்புடைய மேலும் பல வெளிநாட்டினரை இங்கு அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த நைஜீரிய வாலிபர் ஸ்டீபன் கடந்த ஆண்டு முகாமில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார். இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அவரை தீவிரமாக தேடி வந்தனர். பல மாதங்களுக்கு பிறகு ஸ்டீபன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நாடு கடத்தப்பட்டார். தற்போது புதுப்பிக்கப்படும் சிறப்பு முகாம் பலத்த பாதுகாப்பு வசதியுடன் தயாராகி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story