நாங்கள் பெற்ற மனுக்கள் எல்லாம் போலி என நிரூபிக்க தயாரா? அமைச்சர் காமராஜுக்கு கே.என்.நேரு சவால்
திருச்சியில் 2-ம் கட்டமாக பெறப்பட்ட 22,638 மனுக்களை நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் தி.மு.க.வின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. ஒப்படைத்தார்.
திருச்சி,
தி.மு.க.வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் திருச்சியில் 2-ம் கட்டமாக பெறப்பட்ட 22,638 மனுக்களை நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் தி.மு.க.வின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. ஒப்படைத்தார். அதன்பின்னர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் 1 லட்சம் குடும்பத்தினருக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பெற்ற மனுக்கள் எல்லாம் போலி என அமைச்சர் காமராஜ் கூறுகிறார்.
எங்களால் பெறப்பட்ட மனுக்கள் குறித்து நாங்கள் நிரூபிக்க தயாராக இருக்கிறோம். நாள் இடம் குறித்து அமைச்சர் தான் சொல்ல வேண்டும். எங்கள் தலைவர் நிரூபிக்க தயாராக இருக்கிறார். தமிழகத்தில் உணவு பிரச்சினை இல்லை என்று அரசு கூறி வருகிறது. அப்படி இல்லை என்றால் எதற்காக இவ்வளவு மனுக்கள் தி.மு.க.விடம் குவிகிறது. எங்களது ஹெல்ப் லைனுக்கு போன் வந்ததா? இல்லையா? என தெரிந்து கொள்வது அரசுக்கு சுலபம். என்றாலும் அதனை நிரூபிக்க தயாராக இருக்கிறோம். கொரோனாவை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. தேர்தல் வந்தால் ஸ்டாலின்தான் முதல்-அமைச்சர் ஆவார். அதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story