புலியூரில் சுடுகாடு பகுதியை குறைத்து சாலை அகலப்படுத்தும் பணி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
புலியூரில் சுடுகாடு பகுதியை குறைத்து சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால், மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளியணை,
புலியூரில் சுடுகாடு பகுதியை குறைத்து சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால், மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை அகலப்படுத்தும் பணி
கரூரிலிருந்து புலியூர் வழியாக திருச்சி செல்லும் சாலையில் காந்தி கிராமம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து வீரராக்கியம் வரை சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் புலியூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டும், மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டும் வருகிறது. இந்தநிலையில் புலியூர் கடைவீதியை தாண்டி மணப்பாறை பிரிவு சாலை அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வரும் சுடுகாடு உள்ளது.
இந்த சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் சாலை வளைவாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சாலையை அகலப்படுத்தும் பணியின்போது வளைவு பகுதியை நேராக்கி விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். அப்படி செய்யும்போது சுடுகாட்டின் ஒரு பகுதி சாலையாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு, சுடுகாட்டுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பசுபதிபாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story