திண்டிவனம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


திண்டிவனம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2020 9:54 AM IST (Updated: 30 May 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதிக்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையோரம் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் திண்டிவனம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

திண்டிவனம்,

திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் ஆகியோர் திண்டிவனம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏதுவாக இருசக்கர வாகனங்களில் நகர பகுதிக்கு வருபவர்கள் இந்திராகாந்தி பஸ் நிலைய வளாகம், ரெயில்வே மேம்பால கீழ்பகுதி, தீர்த்தகுளம், வண்டிமேடு, தாலுகா அலுவலகம், முருகன் கோவில் ஆகிய 6 இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

மேலும் இந்த இடங்களை தவிர வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால், அந்த வாகனங்கள் காவல்துறை மூலம் பறிமுதல் செய்வதோடு, வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று திண்டிவனம் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரால் ஒதுக்கப்பட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அதனை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story