அரசு மானியத்துடன் கூடிய நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்; கலெக்டர் தகவல்


அரசு மானியத்துடன் கூடிய நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 May 2020 10:07 AM IST (Updated: 30 May 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணைநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகள், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்களின் மூலம் விவசாயிகளின் வயல்களில் அமைத்து தரப்படுகிறது.

இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு பொருள் இலக்காக 7,200 ஹெக்டேரும், நிதி இலக்காக ரூ.50 கோடியே 40 லட்சம் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள், மழை தூவான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சொட்டு நீரிலும் அதிக மகசூல் மற்றும் வருவாய் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, மஞ்சள், வாழை, காய்கறிகள், தர்பூசணி, அனைத்து வகை பழ மரங்கள், கோலியஸ், மலர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீர் பாசன கருவிகளை அமைத்துக்கொள்ளலாம்.

துணைநீர் பாசன மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் பாதுகாப்பான இடங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைப்பதற்கு ரூ.25 ஆயிரம் மானியம், மின் மோட்டார் அல்லது டீசல் என்ஜின் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம் மானியம், பாசன நீர் எடுத்து செல்வதற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்கிட ரூ.10 ஆயிரம் மானியம் மற்றும் நீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்துக்கொள்ள அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் என்ற அளவில் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த 2 திட்டங்களிலும் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், வயல் வரைபடம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயியால் தேர்வு செய்யப்படும் நுண்ணீர் பாசன நிறுவனத்தின் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட்டு நிலங்களில் பொருத்தி தரப்படும். இத்திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story