மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு


மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 May 2020 10:13 AM IST (Updated: 30 May 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

மதுரை,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அங்கிருந்து கடந்த 24-ம் தேதி மதுரைக்கு வந்தார். அதன் பின்னர் அவர் கருங்காலக்குடி பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருப்பதாக கூறி அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா பரிசோதனை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுபோல் சர்க்கரை நோய்க்கும், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று இருப்பது நேற்று காலை உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே சிகிச்சையில் இருந்த அந்த மூதாட்டி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் மதுரையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

3 ஆக உயர்வு

ஏற்கனவே மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டு மதுரை அண்ணாநகரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவரின் தாயார் ஆகியோர் உயிரிழந்த நிலையில் தற்போது மூதாட்டி இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Next Story