கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா
கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 443 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டனர். இதில் 420 பேர் பூரண குணமடைந்து, தங்களது வீடுகளுக்கு சென்றனர். ஒருவர் மட்டும் பலியாகி உள்ளார். இந்த நிலையில் மேலும் பலரது ரத்தம் மற்றும் உமிழ்நீர் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 378 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன.
இதில் கடலூர் செம்மண்டலம் தண்டபாணி நகரில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த இந்த நகரை சேர்ந்த 35 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது கணவர், 13 வயது மகன், 11 வயது மகள், மாமனார், மாமியார் ஆகிய 5 பேரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினர். மேலும் இவர்களின் உமிழ்நீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவர்கள் 5 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தனி வார்டில் 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 423 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸ் தொற்று அறிகுறியுடன் மொத்தம் 27 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 171 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது
Related Tags :
Next Story