ஊரடங்கு காலத்தில் ஆன்-லைன் வகுப்பு நடத்தி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை


ஊரடங்கு காலத்தில்   ஆன்-லைன் வகுப்பு நடத்தி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 May 2020 10:35 AM IST (Updated: 30 May 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் அரசு உத்தரவுக்கு முரணாக ஊரடங்கு காலத்தில் ஆன்-லைன் வகுப்பு நடத்தி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி எச்சரித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி இதுகுறித்து கூறியதாவது:-

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஊரடங்கு காலத்தில் மாணவ, மாணவிகளிடம் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்-லைன் வகுப்புகள் நடத்தி மாணவ, மாணவிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளதாக புகார் கூறப்பட்டால் நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு செல்போன்கள் மூலம் தகவல் அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில பள்ளிகள் ஆன்-லைன் வகுப்பு நடத்தி மாணவ, மாணவியரை கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எச்சரிக்கை

அரசு உத்தரவுக்கு முரணாக தனியார் பள்ளிகள் ஊரடங்கு காலத்தில் மாணவ, மாணவிகளிடம் இருந்து கட்டணம் வசூலித்தால் பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஊரடங்கு காலத்தில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story