சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா


சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 May 2020 5:40 AM GMT (Updated: 30 May 2020 5:40 AM GMT)

சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பெரும் பேரிடரை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் முதன் முதலாக சென்னைக்கு வெளியே கொரோனா பாதிப்பால் பரபரப்பை ஏற்படுத்தியது ஈரோடு மாவட்டம்.

ஆனால், ஈரோடு மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகளின் கடுமையான உழைப்பு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் தமிழகத்திலேயே முதன் முதலில் கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டமாகவும் ஈரோடு மாறி யது.தொடர்ந்து கொரோனா பரவல் இல்லாத மாவட்டமாக சுமார் 35 நாட்கள் இருந்தது. ஆனால் சென்னையில் இருந்து வந்த வாலிபர் ஒருவரின் தந்தைக்கு திடீர் என்று கொரோனா அறிகுறி தென்பட்டதால் ஈரோடு அதுவரை இருந்த பச்சை மண்டல சிறப்பை இழந்தது.

இந்த நிலையில் ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் சொந்த ஊரான ஈரோட்டுக்கு திரும்பிய அவர் விமானம் மூலம் சேலம் வந்தார். அங்கு அவருக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் உடனடியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவருடன் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. ஏற்கனவே ஒருவர் இறந்த நிலையில் 69 பேர் குணமாகி வீடுகளுக்கு சென்று நல்ல நிலையில் உள்ளனர். ஒருவர் சேலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கொடுமுடியை சேர்ந்த 40 வயது நபருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாநில அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்படவில்லை.

தற்போது பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story