சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல்: பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்த என்ஜினீயரிங் மாணவர் கைது


சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல்: பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்த என்ஜினீயரிங் மாணவர் கைது
x
தினத்தந்தி 30 May 2020 11:16 AM IST (Updated: 30 May 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பெண்ணின் படத்தை ஆபாசமாக தயாரித்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரை தொடர்பு கொண்டு ஒரு புகாரை அளித்தார். அதில், எனது மனைவியின் புகைப்படங்களை ஒருவர் ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து எனக்கும், எனது உறவினர்களுக்கும் அனுப்பியதோடு, முகநூலில் பதிவிடுவதாக கூறுவதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறி இருந்தார்.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் முகநூல் பக்கத்தில் இருந்து படத்தை எடுத்து, அதனை ஆபாச பெண்களின் படத்துடன் இணைத்து மார்பிங் செய்திருந்தது தெரியவந்தது.

அதனை அந்த நபர் முகநூல் மெசஞ்சர் மூலமாக அனுப்பி ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அனைத்து சமூக வலைதளங்களிலும் இதனை பரப்பி விடுவதாகவும் கூறியது தெரியவந்தது. எனவே சைபர் கிரைம் குற்ற தடுப்பு பிரிவு உதவியோடு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த நபர் பரமக்குடி உலகநாதபுரம் கண்ணதாசன் மகன் ரோகித் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆபாச வீடியோக்கள்

கோவையில் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வரும் இவர், முகநூலில் 4 கணக்குகள் தொடங்கி அதில் 2 கணக்குகளை போலியாக பதிவு செய்து, முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பெறுவதையே வழக்கமாக கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது பல ஆபாச வீடியோக்கள் இருந்தன. எனவே அது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலோ, மேலும் சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்கள் அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்தாலோ எந்தவித தயக்கமும், அச்சமும் இல்லாமல் தனது தொலைபேசி எண் 94899 19722-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தருபவரின் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story