சத்தி, கோபி, அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்


சத்தி, கோபி, அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 30 May 2020 11:19 AM IST (Updated: 30 May 2020 11:19 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில் மாவட்டத்தின் பல இடங்களில் வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்தது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அதேபோல் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது.

சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நேந்திரன், செவ்வாழை, தேன்வாழை, கதலி வாழை மரங்கள் சாய்ந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘சத்தியமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையில் 7 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. அரியப்பம்பாளையம் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின. சேதமடைந்த வாழைகளை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் அரியப்பம்பாளையத்தில் இருந்து உக்கரம் செல்லும் வழியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சுமார் 100 ஆண்டுகள் ஆன பெரிய வாகை மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. மேலும் மழையும் தூறிக்கொண்டே இருந்ததால் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்த முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.

இதேபோல் வரதம்பாளையத்தில் ஒரு மரம் விழுந்ததில் மின்கம்பம் வளைந்து சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கெஞ்சனூர் பகுதியிலும் சின்ன சின்ன மரங்கள், கிளைகள் ரோட்டில் முறிந்து விழுந்து கிடந்தன. இந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

கோபி

கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம், பொலவக்காளிபாளையம், கூகலூர், வெள்ளாளபாளையம் மற்றும் அயலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளிகாற்றில் 300 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த மொந்தன், கதலி, தேன்வாழை, பூவன், நேந்திரன், செவ்வாழைகள் என 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் தடப்பள்ளி பாசன பகுதிக்கு உள்பட்ட பாரியூரில் நெல் பயிர்கள் சாய்ந்தன.

அந்தியூர், ஆப்பக்கூடல், அத்தாணி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம், பிரம்மதேசம், எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட அந்தியூரை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

மேலும் சூறாவளிக்காற்றில் ஆப்பக்கூடல்-கூத்தம்பூண்டி பிரிவு ரோட்டில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் கூத்தம்பூண்டி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம், சக்தி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுதும் மின்சாரம் தடைபட்டது

அதேபோல பர்கூர் மலைப்பகுதியிலும் இரவு மழை பெய்தது. இதில் 4 இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது. மழையால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பியது. டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்தன.

நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டர் அளவில்) வருமாறு:-

கோபி -61, பவானி -59.4, கொடுமுடி -59, கவுந்தப்பாடி -52, ஈரோடு -49, சத்தியமங்கலம் -49, நம்பியூர் -46, கொடிவேரி அணை -31.4, பவானிசாகர் -31, அம்மாபேட்டை -28.6, குண்டேரிப்பள்ளம் -28, தாளவாடி -26, பெருந்துறை -22, மொடக்குறிச்சி -21, வரட்டுப்பள்ளம் -7.8, சென்னிமலை -4.

மேற்கண்டவாறு நேற்று முன்தினம் மழை அளவு பதிவாகி இருந்தது.

Next Story