நஞ்சை ஊத்துக்குளியில் பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி


நஞ்சை ஊத்துக்குளியில் பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
x
தினத்தந்தி 30 May 2020 11:28 AM IST (Updated: 30 May 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சை ஊத்துக்குளியில் பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியின் பஸ் நிலையம் அருகில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது. 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியின் மூலமாக நஞ்சை ஊத்துக்குளி, கருந்தேவன்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த தண்ணீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தொட்டி பழுதடைந்து உள்ளது. அதில் இருந்து தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் தொட்டி பலகீனமாக இருப்பதால், அதன் உறுதி தன்மை இழந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் மேல்நிலை தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன் அடைந்து வருகிறார்கள். தற்போது தண்ணீர் தொட்டி சிதிலமடையும் நிலையில் உள்ளது. கான்கிரீட் சுவர் வழியாக தண்ணீர் வழிகிறது. இதனால் கான்கிரீட் சுவரும் பெயர்ந்து வருகிறது. அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story