பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கோடை மழை பெய்யாததால் வியர்வையில் நனையும் மக்கள்


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கோடை மழை பெய்யாததால் வியர்வையில் நனையும் மக்கள்
x
தினத்தந்தி 30 May 2020 6:02 AM GMT (Updated: 30 May 2020 6:02 AM GMT)

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கோடை மழை பெய்யாததால் பொதுமக்கள் வியர்வையில் நனைந்து வருகின்றனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கோடை மழை பெய்யாததால் பொதுமக்கள் வியர்வையில் நனைந்து வருகின்றனர்.

வெயில்

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த மாதம் (ஏப்ரல்) முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சில சமயங்களில் அனல் காற்றும் வீசுகிறது.

இவ்விரு மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யாததால் வெயிலின் உக்கரத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் வியர்வையில் நனைந்து வருகின்றனர். மேலும், கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன.

குளிர்பானங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் வெளியில் வருவதில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள் வெயிலின் உக்கிரத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தலையை துணியால் மூடியபடியும், குடை பிடித்த படியும் வீதிகளில் சென்றதை காண முடிந்தது. வெயிலால், தினமும் மதியம் பெரும்பாலான தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வெயிலின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவர்கள் சாலையோரங்களில் விற்கப்படும் இளநீர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடித்து தாகம் தணித்து வருகின்றனர். வெயிலால் தர்பூசணி பழங்களின் விற்பனையும் அமோகமாக உள்ளது. ஐஸ்கிரீம் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கத்திரி வெயில் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததால், இனியாவது வெயில் குறைந்து மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

Next Story